இன்னொரு முகம்!
----------------------------------
ஹோம குண்டம், சுற்றி அழகான, அலங்காரமான பந்தல். சுற்றித் தென்னம்பூ சர வரிசை. அம்மிக்கல், நெல்லு. நெய்,
பொரி, பெரிய தாம்பாலங்களில் வரிசையாய்
பல வகையான பழங்கள், மாலைகள், அம்மிக்கல் இன்னும் எனென்னவோ...... தூரத்தில் மேள வாத்தியம்.
மண மேடையில் மாலதி.
இலையில் தண்ணீர் வழித்து ஊற்றச்சொன்னார் சாஸ்த்திரிகள். ஊற்றினாள். மந்திரம்
சொன்னார். திருப்பிச்சொன்னாள்.ஆனாள் அவள் கண்கள் தேடியது. அடுத்த வீடு, பக்கத்து வீடு...எல்லாம்
மண மேடையில் நின்றிருந்தது. தேடியவர்கள் கண்ணில் படவில்லை. நாலு அண்ணன்கள்.
எஞ்சினியர், டாக்டர், லெக்சரர், பிஸினஸ் மேன். மாலதி கடைக்குட்டி. அம்மா இல்லை.
அப்பா உண்டு.அவரும் அண்ணிகள் கொடுமை தாங்காமல் ஓடிப்போனார். அந்த அண்ணிகளைத்தான் தேடினாள்.
ஒறே நாத்தனார் கல்யாணம். பக்கத்திலிருக்க மாட்டார்களா! என்னிக்கு இருந்திருக்காங்க?.
மூத்த அண்ணி அன்பாய் இருந்தாள். அடுத்தடுத்து அண்ணன்களுக்கு கல்யாணம் ஆனதும் போட்டி
நுழைந்தது. பொறாமை வளர்ந்தது. டெல்லி,பாம்பே, சென்னை, தஞ்சாவூர்னு பந்தாடினார்கள்.
வருஷத்தில் மூன்று மதங்களுக்கு ஒரு முறை நாலு இடம் பிடுங்கி நட்ட்டார்கள். அண்ணன்கள்
ஒரு சின்ன செடிக்குத் தண்ணி ஊற்றாமல் கருகவிட்டார்கள்.பாதி நாட்கள் பஸ்சிலும், ரயிலிலும்
அல்லாடினாள் மாலதி.
மீதி நாட்களுக்கு அண்ணிகளின் சிறையில்.
அண்ணிகள் இவளிடம் நல்லவர்களாக நடித்தார்கள். உள்ளங்கையில் தாங்குவது போல நடந்துக் கொண்டார்கள்
அவள் அவகர்கள் வீட்டில் இருந்த பொழுது சித்திரவதை பட்டதெல்லாம் அண்ணன்கள்.
மாலதி வீட்டிலிருக்கும்வரை தொட்டதெற்கெல்லாம் கணவன் மனைவி சண்டை. ஓயாமல் பிரச்சனை.
ஒரே தங்கை. அவளையும் கைக்குள் வைத்து வளர்க்க முடியவில்லையேன்னு ஏங்கினார்கள். ஒரு
பிடி சோறு இறங்காமல் தவித்தார்கள். ஒரு சினிமா, கோவில்,....ம்ம்...பாசமாய் ஒரு பார்வை,
அன்புடன் ஒரு வார்த்தை, தனிமையில் ஒரு சீராட்டல்..மூச்...ஒன்றுமில்லை. சத்தான சாப்பாடும்,
பகட்டான உடையும், பஞ்சு மெத்தையுமா வாழ்க்கை ! பாசம்.
அது வற்றிய பாலைவனத்தில் மாலதி தவித்தாள்.
மனைவிக்குத்தெரியாமல் ஒளிந்து, ஒளிந்து பேசும் அண்ணன்களின் அவசஸ்த்தை மாலதியின்
சந்ததோஷம் சிதைத்தது. இது என்ன அவஸ்த்தை இறைவான்னு துவண்டாள். எப்போதும் கண்கள் துக்கம்
சுமந்தன. அங்கே அபூர்வமாய் சிரிப்பு தெரிந்தால் போதும் அண்ணிகள் பேயாடினார்கள். அண்ணன்களை
குடைந்தார்கள். அவர்களின் சுதந்திரதைக் கட்டுப்படுத்தினார்கள். அண்ணன்களின் சின்ன சின்ன
பலவீனங்களை இவள் முன் பெரிது படுத்தினார்கள்.
" சிகெரெட் குடிச்சீங்களா? உங்க வீட்டுக்காரர் பிள்ளைங்களுக்கு இதைத் தான்
சொல்லிக் கொடுப்பார்னு நக்கல்லா
கேக்கறா பக்கத்து வீட்டு மங்களம். எனக்கு
நாக்க பிடுங்கிக்கலாம் போல இருக்கு" என்று ரோஷமாய் கத்துவாள்
இரண்டாவது அண்ணி.
" ஏங்க டூர்கொண்டு போன சூட்கேஸில் பிராந்தி பாட்டில் இருக்கு. மார் சளின்னா
மருந்து வாங்கி குடிக்கிறது. இந்த சனியனை எப்பதான் விடொழிப்பீங்களோ" மூக்கை சிந்துவாள்
முதல் அண்ணி.
" உங்க ஹாஸ்பிடல் நர்ஸ் நம்ம கார்ல தினமும் வீட்டுக்குப்போறாளாமே! அவள்
தோல் வெள்ளைன்னு அவளுக்கு சலுகையா!?அவளோட இளிச்சுட்டு அங்கே இங்கே சுத்தினதா என் காதுக்கு
எட்டுச்சி நடக்கறதே வேற " உறுமுவாள் நாலாவது அண்ணி.
தொடைவரை புடவையை வழிச்சி விட்டுக்கொண்டு கதவையும்
திறந்து வைச்சுக்கிட்டு கால் பிடிக்கச்சொல்லுவாள் மூன்றாவது அண்ணி. மாலதி அந்தப்பக்கம்
போவது தெரிந்தாள் " கால் பிடிக்க துப்பில்லே! காலேஜில் என்ன வெட்டி முறிக்கிறீங்க?"
என்று கணவனை முகத்தில் இடிப்பாள்.
மாலதிக்கு
கூசிப்போகும். அண்ணன்களை நேரில் பாரக்க முடியாமல் குன்றினாள்.அவள் இருக்கும் மூன்று
மாதமும் அண்ணன்கள் நரகத்தில் உழல்வது மரண வேதனையாக இருக்கும். அது அவள் மனதில் மாறாத
தழும்பானது.
வெறுப்புடன் நாட்களை நகர்த்தினாள்.
ஒரு வழியாக திருமணம் கூடியது. கணவனாகப் போகும் ரவி ஸ்டேட் பாங்கில் கிளார்க்.
அம்மாவும் ஒரே தங்கையும். சொந்த வீடு உண்டு என்றதும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்.கல்யாணம்
முடிந்தது. அண்ணிகள் பெருமைக்கு நகை, புடவை,
சீர் என்று போட்டி போட்டுக்கொண்டு ஊர் மெச்ச செய்தார்கள்.
ஆனால் அண்ணன்களை மட்டும் மாலதியிடம் நெருங்க விடாமல் பார்த்துக்கொண்டார்கள். அப்பாடா
விட்டால் போதும் சனியன்னு தலை முழுகினார்கள். ஒரு விருந்தில்லை. மறு வீடு அழைப்பில்லை.கழுத்தைப்
பிடித்துத் தள்ளாத குறையாகக் கணவன் வீட்டிற்கு ஓட்டினார்கள். மாலதி விரக்தியில் வெதும்பினாள்.
மனம் இறுகிற்று. வைராக்கியம் பிறந்தது. மனதில் சத்தியம் அடித்து சொல்லிக்கொண்டாள்.
' எந்தக் காரணத்துக்காகவும் கணவனை
கட்டுப்படுத்தக் கூடாது. எடுத்ததுக்கெல்லாம் ஆபாசமாய் கத்தி சண்டை போடக்கூடாது. கருத்து
வேற்றுமை வந்தால் வாய் பேசாமல் விட்டுக் கொடுக்கனும். முக்கியமாய் ரவி தன் தங்கையை
நேசிப்பதை, தன் அம்மாவிடம் அன்பாக இருப்பதை தடுக்கக் கூடாது. போதும் மூச்சு முட்ட முட்ட
முழி பிதுங்கி வாழ்ந்த வாழ்க்கை என் அண்ணன்களோடு போகட்டும். அந்த மாதிரி இம்சை வேறு
எந்த ஆணுக்கும் வேண்டாம். அதுவும்என் ரவிக்கு வேண்டவே வேண்டாம். 'மனதில் சபதம் செய்துக்கொண்டாள். அதே
போல கணவன் வீட்டில் நடந்துக்கொண்டாள்.
" ரவி ...ரவின்னு.." மகன் ஆஃபீஸ் கிளம்பற வரைக்கும் தன் கூடவே வைத்துக்கொண்ட
மாமியாரை
கண்டுக்கொள்ளமல் விட்டாள். "அண்ணா
கொஞ்சம் வாயேன்.. எனக்கு லிப்ஸ் ஆயில் வாங்கனும். பர்த்டேக்கு புது புடவை வாங்கனும்"
என்று ரவியின் கையைப்பிடித்து விஜி அழைத்தபோது சந்தோஷமாக அனுப்பி வைத்தாள்.
மருமகள் மூஞ்சி தூக்காமல் ,சிரிப்பு வற்றாமல் பதவிசாக இருந்தது மாமியாரை மயக்கியது.
என் மருமகள் சொக்கத்தங்கம்னுதூக்கிக் கொண்டாட வைத்தது.
அண்ணன் தனக்குப் பார்த்து பார்த்து செய்வதை தடை சொல்லாமல் இருந்த அண்ணியுடன்
அட்டை மாதிரி ஒட்டிக்கொண்டாள். நாத்தனார் விஜி.
"நீ ரொம்ப கெட்டிக்காரி மாலி. வந்து ஒரு மாசத்திலேயே அம்மவையும் விஜியையும்
வளைச்சுட்டே" என்று ரவிசொன்னபொழுது சின்னதாய் சிரித்தாள். பயமில்லாமல், சிறுமையில்
குன்றாமல் சந்தோஷித்து இருக்கும் இந்த வாழ்க்கைக்காக எதையும் தியாகம் செய்வேன் ரவின்னு
மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
ரவுயின் பால்ய நண்பன் ராகவ் டெல்லியிலிருந்து
திரும்பினான். ஒன்றாகப் படித்து ஒரே பிரான்ச்சில் வேலைக்கு அமர்ந்தவன்.ஒரு மாத பயிற்சிக்குப்பின்
ஆஃபீஸ் வந்தவன் ரவியை பிடித்துகொண்டான். உற்சாகமாய் தன் புது மனைவியைப்பற்றி ரவியும்
பலதும் பேசினான். அம்மாவையும் தங்கச்சியையும் பார்த்துக்கொள்ளும் மாலியைப்பற்றி ராகவ்விடம்
பெருமையுடன் பேசினான்.
" ராகவ் மாலதி கிட்டே கொஞ்சம்கூட பிடிவாதமே இல்லைடா. எது சொன்னாலும் சரி
சரின்னு சொல்லிடறா. தன் ஆசைகளைநிறைவேத்திக்கனும், தனக்கு பிடிச்ச விதமா, தான் நிணைக்கிற
படியெல்லாம் மத்தவங்க ஆடனும்கற முரட்டுத்தனம் இல்லை" அவன் சொல்லும்பொழுது கர்வம் குரலில், கண்ணில், உணர்ச்சியில் துள்ளியது. பேசிக்கொண்டேபோன
ரவியை " அதிருக்கட்டும்உன் கிட்டே எப்படி இருக்கா உன் மாலி அதை சொல்லுடா " என்று
கேட்டான் ராகவ்.
நெருங்கிய நண்பன் என்றாலும் தன் மனைவி தன்னிடம் அந்தரங்கமாய் நடந்துக்கொள்ளும்
இனிமையான அனுபவத்தைப் பகிர்ந்துக்கொள்ள கூச்சப்பட்டு நெளிந்தான்.
"என்னடா நெளியிற? வெட்கமா, இல்லை புது மனைவி மோக போதையா?" ரவி அவஸ்த்தையில்
அசடு வழிந்தான்.
அவன் நினைவுகள் முதலிரவின் இன்ப லாகிரியில் திளைத்தது.
முதலிரவன்று
கதவருகில் நின்ற மாலியைப்பார்த்து மெல்ல சிரித்து அருகில் வரும்படி கண்ணால்
அழைத்தான். நாணத்தில் தலைகவிழ்ந்தவளை ரஸிப்புடன் நெருங்கினான். காலில் விழப்போனாவளை
தடுத்தான். நெஞ்சோடு சேர்த்தணைத்தான்.
" மாலி இது நாம ரெண்டுபேர் மட்டும் தனிமையில் லயிக்கிற இடம். இது நீ ஒஸ்த்தி,
நான் ஒஸ்த்திங்க்கற பிரமைகள் கலைகின்ற இடம். இங்கே ரெண்டு பேரும் இம்சையில்லாமல் சுதந்திரமா
சுவாசிக்கனும். அதுதான் முக்கியம். நீ கால்ல விழறதிலே இல்ல என் மரியாதை. வா இப்படி
உட்கார். என்னை பிடிச்சிருக்கா" என்று கேட்டவனை கண்களில்
கண்ணீர் மின்ன நிமிர்ந்துபார்த்த்தவள்
" ம்...ம்ம்ம்" என்று தலையாட்டினாள்.
" அப்பிடின்னா இதை வாங்கிக்கோ
" அவள் முகத்தை நிமிர்த்தி உதட்டில் முத்தம் பதித்தான். தீண்டுமின்பம்!
தொடுதல்
சுகம்! மாலதியின் முகம் குப்பென்று சிவந்தது. காது மடல்கள்
விறைத்தன. ரத்த நாளங்கள் சூடேறியது. கண்கள் தானாக மூடியது. உணர்ச்சியில் தத்தளித்து
கால் நடுங்க நின்றவளை கட்டிலில் மெல்ல சாய்த்தான். விளக்கை அனைத்தான். அவன் கைகள் அவள் கழுத்தில் இறங்கி மாலியின் சட்டை கொக்கிகளைத்
தடவி தடவி அவிழ்த்து ப்ராவை உருவின. அவள் வெட்கத்தில் சினுங்குவதும் அவன் தொடுதலில்
மகிழ்ச்சியில் மனசும் உடலும் பொங்குவதும் என்ற இன்ப அவஸ்த்தையில் நெளிந்தாள். அவன்
குறும்புடன் சட்டென்று விளக்கைப் போட்டான். ' முயல் மாதிரி வெளேரென்ற மார்புகள்!
" ஐயோ! போங்க நீங்க !" மாலதி கூவினாள். கைகளால் பொத்திக்கொண்டாள். அவசரமாய்
குப்புற சாய்ந்தவள் நிமிரவேயில்லை. ரவி சிரித்தான். மீண்டும் விளக்கை அனைத்துவிட்டு
மாலியை திருப்பினான். " போங்க...போங்க" என்றவள் சிணுங்கியபடி செல்லமாய் அவன்
மார்பில் குத்தினாள். அவள் கை விலக்கி இறுக்கி அணைத்து அவள் மேல் பரவிய போது உவகையுடன்
ஒத்துழைத்தாள்.
அன்று ஆரம்பித்து இன்றுவரை மாலதியின் அன்பும் அதிராத பேச்சும், மென்மையான இயல்பும்
ரவியின் மனதில் தித்தித்தது.ஒன்றுவிடாமல் ராகவ்விடம்
கிசு கிசுப்பாய் சொன்னான். கிள்ர்ச்சியுடன் கேட்டுக்கொண்டவன் கடைசியில் " எல்லாம்
சரி எதிர்ப்பே இல்லேங்கற " இந்த ஷர்ட் போடுங்க, தலையை இப்படி சீவுங்க, டக் செஞ்சுக்குங்கன்னு
கூடவா பிடிவாதம் செய்யிறதில்லே!"
" இல்லேடா"
"தினமும் வீட்டுக்கு நேரத்தோடயே போயிடறியா?'
"ஆமா..."
"என்னிக்கும் லேட் ஆகல்லியா?"
" போன வாரம் ரகு ஸெகண்ட் ஷோவுக்கு கூப்பிட்டான். போயிருந்தோம். வீடு திரும்ப
லேட் ஆயிடிச்சி ..."
" மாலதி ஏன் லேட்னு கேக்கல்லியா?"
" இல்லடா..சினிமாவுக்கு போனேன்னு
சொன்னேன் சிரிச்சுனே அப்படியான்னு கேட்டுட்டு விட்டுட்டான்னு"
காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சொன்னான்.
ராகவ் கொஞ்ச நேரம் அமைதியானான். பின் ஆரம்பித்தான்
" ரவி எனக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு"
"ஏண்டா ஒரு வருஷம் எட்டு மாசம்.."
" அடேயப்பா கரெக்டா ஜாபகம் வச்சிருக்கியே! அத விடு கிட்ட கிட்ட ரெண்டு
வருஷத்தில் எப்பிடி என்னை மாத்திட்டா தெரியுமா என் பெண்டாட்டி அகிலா. ஃபிரண்ட்ஸ் கூட
அரட்டை, பார்க், பீச்சென்று சுத்தறது எல்லாம்
சுத்தமா கத்தரிச்சுட்டா. சினிமாவுக்கு அவள் இல்லாம போகக்கூடாது. வந்த அன்னிக்கே என்
அறையில் இருந்த சிலுக்கு, அமலா, நிரோஷா எல்லாரையும்
பொறுக்கிக்கொண்டு போய் குப்பையில் போட்டுட்டாள். நம்ம கூட படிச்சாளே வினுதா அவ அனுப்பின
கிரீட்டிங்ஸ் ஒன்னு அவள் கையில் கிடைச்சிடுச்சி. அவ்வளவுதான் பிடி பிடின்னு பிடிச்சுட்டா.
சொல்லி புரிய வைக்க முடியாமல் திண்டாடிப் போனேன். பனியன், சட்டையிலிருந்து ஐயா போடரது
எல்லாமே இன்னிக்கும் அவ செலக்ஷந்தான். சிகெரெட் கூட அவளுக்குத் தெரியாம இங்கே ஆஃபீஸில்
அடிப்பத்துதான். அவளை மீரி ஒரு காரியம் செஞ்சிட முடியாது. எதுக்கு சொல்றேன்னா பொம்பளைங்க
நேச்சர் அப்பிடி. கல்யாணம் ஆயிட்டா போதும் கணவன்கிட்ட ஒட்டிப்பாங்கஅவனோட ஒவ்வொரு இன்ச்
மனசும். உடம்பும் தனக்கு மட்டும்தான் சொந்தம்ங்கற பொஸஸிவ்னஸ் வந்துடும்.அவன் பேச்சு,
சிரிப்பு, மூச்சு எல்லம் தங்களை மையமா வெச்சுதான் இருக்கனும்னு வெறியாயிடுவாங்க. நமக்கு
ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்தாலும் இதுவும்
ஒரு சுகம் தாண்டா ரவி. நீ சொல்றத பார்த்தா மாலதி வித்தியாசமானவளா தெரியறா. ஒரு வேளை
உங்கிட்டே அவ்வளவு ஒட்டுதல் வரல்லியோஎன்னவோ. பிறந்த வீட்டாரை நினைத்துக்கொண்டு இருக்கிறாளோ
என்னவோ! "
" இல்லை ராகவ் அவள் இந்த ஒரு மாதத்தில் ஒரு நாள் கூட அவள் வீட்டைப்பற்றியோ
அவள் அண்ணன்களைபற்றியோ பேசியது இல்லைடா. நானா ஏதாவது கேட்டால் கூட ரொம்ப அசுவாரஸ்யமாதான்
பதில் சொல்லுவாள்." என்றவனை ராகவ்
தோளில் தட்டி சரிடா ஒரு மாசம்தானே ஆகிறது.
எல்லாம் சரியாயிடும்" என்று ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பிப்போனான்.
ரவிக்கு பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்த மாதிரி இருந்தது. ரவியின் மொத்த உற்ச்சாகமும்
வடிந்த்தது போல இருந்ததுமனதில் கவலை புகுந்தது.சந்தேகம் துளிர்த்தது. குழப்பத்துடன்
வீட்டுக்கு வந்தான். மாலதியுடன் மகிழ்ந்திருந்த வேளையில் ராகவ்வின் வார்த்தைகள் மீண்டும்
நினைவில் வந்தது. முள்ளாய் குத்தியது.மனைவியை நம்பிக்கையற்று ஆராயும் இழிகுணம் மேலோங்கியது.
ராகவ் விளையாட்டா ஊதிவிட்ட நெருப்பு திகு திகுன்னு எரிய ஆரம்பித்தது.இந்த சிந்தனையில்
சில மாதங்கள் கழிந்தது. அவன் மனதில் மாலதிக்குப் பிடிக்காத எதையாவது செய்தால் என்ன!
முரண்டு பிடிப்பாளா! எதிர்ப்பாளா! அதை பரிட்சிக்கும் ஆசை வந்தது. என்ன செய்யலாம் என்று
யோசித்தான்.
மாலிக்கு சிகெரெட் வாசனைப் பிடிக்காது. சினிமா தியேட்டரில், பஸ்ஸில் யாராவது
புகைப் பிடித்தால் அவஸ்தைப்படுவாள். மூக்கை மூடிகொண்டு திணறுவாள். அதைப்பார்த்து நல்ல
வேளை நமக்கு புகை பிடிக்கிற பழக்கமில்லைன்னு சந்தோஷப்பட்டிருக்கிறான். ஆமா அதில் ஆரம்பிக்கலாம்.
ஃபில்டர் வில்ஸ் பாக்கெட் ஒன்று வாங்கினான். சட்டையில் வைத்துக்கொண்டான். பஜாஜ்
உதைத்து வீட்டுக்கு
வந்தான். வாசலில் வழக்கம்போல மாலதி நின்றுக்
கொண்டிருந்தாள்.உள்ளுக்குள் அவன் மனம் துள்ளீயது. அவள் பார்க்கிறாளான்னு பர பரத்தான்.
வண்டியை பூட்டும் சாக்கில் குனிந்து மாலியைப் பார்த்தான். அவள் சிகெரெட் பாக்கைப் பார்த்தாளா?
தெரியவில்லை! மாலி வண்டியிலிருந்து சாப்பாட்டுக்கூடையை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள்.
என்ன இவ கண்டுக்காம போறா? அப்படின்னா பார்க்கலையோ! வீட்டுக்குள் நுழைந்தவன்
விடு விடுன்னு தன் படுக்கையறைக்குள் நுழைந்தான். அம்மா பார்த்துவிட்டால்! குறுக்கும்
நெடுக்கும் நடந்தான். சட்டையை கழட்டினான். காப்பி குடித்துவிட்டு வெளியில் கிளம்பும்பொழுது
மாலியை கூப்பிட்டான் " இன்னிக்கு போட்டுட்டுப்போன
சட்டை ரொம்ப அழுக்காயிட்டது தோய்ச்சி போடு" விரைப்பாய் சொல்லிவிட்டு வெளியில்
போனான்.
மாலிக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. என்ன இது புதுசா இன்னிக்கு
சட்டையை தோய்க்கச்
சொல்றார்.எப்பவுமே "
ஒரு நாள்தானே போட்டேன் மாலி. இருக்கட்டும் விடு "
என்பவனை அவள்தான் " வியர்வை வாடை இருக்கும்ங்க. அழுக்கில்லைன்னாலும் தோய்ச்சுடறது நல்லதுன்னு "
சொல்லி தோய்த்துவிடுவாள். இன்னிக்கு எதுக்கு அதை தோய்க்க சொல்றார் என்று யோசித்தவள்
சட்டையை எடுக்கப்போனவள் மனதில் இன்னொரு கேள்வியும் இருந்தது. இன்னிக்கு என்ன வீட்டுக்கு
வந்ததும் மீண்டும் வெளியே போயிட்டார். கொஞ்சம் சிடு சிடுன்னு முகம் இருந்தது வேறு அவள்
மனதைக் குடைந்தது. அவன் சட்டையை எடுத்து பாக்கெட்டை காலி செய்ய கை விட்டவளின் கையில் தட்டுப்பட்டது
ஃபில்டர் வில்ஸ் பாக். அவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. இருந்தாலும் அவள் மனதை
கட்டுப்படுத்திக்கொண்டாள். அதையும் மீறி அவள் கண்கள் கலங்கின.
ரவி வேண்டுமென்றே நேரம் கழித்து வந்தான். மாலதிதான் கதவைத்திறந்தாள். அவள் மௌனமாய்
சமையலரைக்குள் நுழைந்துக் கொண்டாள். ஏன் லேட் என்று அவள் கேட்காதது ரவிக்கு ஏமாற்றமாய்
இருந்தது. அவனும் பல்லைக்கடித்துக்கொண்டு ஏதோ பேருக்கு சாப்பிட்டோம் என்று சாப்பட்டைக்
கொறித்தான். ஆனால் மாலி மட்டும் எப்பொழுதும் போல அவன் முகம் பார்த்துப் பறிமாறினாள்.
அவனுக்கே கொஞ்சம் பரிதாபமாயிருந்தது. தான் வேண்டாமல் ராகவ்வின் பேச்சில் குழம்பி அவளைகஷ்டப்படுத்தறமோ
என்றும் தோன்றியது. பலதும் எண்ணியவாறே குமைந்தபடியே தூங்கிப்போனான்
மறு நாள் குளிக்கப்போனவன் கொடியில் சட்டை தொங்குவதைப்பார்த்தான். அப்படின்னா
சிகெரெட் பாக்! ஓ!
அழுத்தக்காறி குப்பைக் கூடையில் வீசியிருப்பாள்.
அவசரமாய் குளித்தான். தலைத்தெறிக்க படுக்கையறைக்கு ஓடினான்.
எதிரில் வந்த விஜி மீது மோதினான். " என்ன ஆச்சுண்ணா" என்ற விஜியை அலட்சியமாய்
ஒதுக்கி அறைக்குள்
நுழைந்தான். அங்கே அவர்கள் பெட்டில் இவன்
அன்று போட்டுக்கொண்டு போகும் உடைகளின் மீது சிகரெட் பாக் பத்திரமாய்
வைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு ஏமாற்றமாகவும்
அழுகையாகவும் இருந்தது.' என் கிட்டே புகை பிடிக்கிற பழக்கமில்லைன்னு
மாலிக்குத் தெரியும். தெரிஞ்சும் இது என்ன
புதுப்பழக்கம்னு அவள் கேட்கவில்லை. அவ்வளவு நெஞ்சழுத்தம்.
அவளுக்கு என் மேல் அக்கறையில்லை. ராகவ்
சொன்னது சரிதான். அவளுக்கு எங்கிட்டே ஈடுபாடு வரவில்லை' என்று வருந்தியபடி ஆஃபீஸ்சுக்கு
கிளம்பியவன் மனதில் விபரீதமான எண்ணம் தோன்றியது
. ஆத்திரம், கோபம், எரிச்சல்.. மண்டியது.அவசரமாய் ஒரு சிகெரெட்டை உருவினான். வாயில்
வைத்து பத்த வைதான்.புதிய பழக்கம். புகை தொணடையில் கமற்யது. மூக்கை அடைத்தது. இருமல்
வந்தது.
அண்ணனைச் சாப்பிட அழைக்க வந்த விஜி அவன் புகைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து
அதிர்ந்தாள். உடனே
ஓடிப்போய்அவள் அம்மாவிடம் சொன்னாள். அவன் அம்மாவுக்கு
பெரிய அதிர்ச்சி. என்னடீ சொல்ற சும்மா விளையாடாதா போ... என்றவள் விஜி சைகையில் அமமாவை
வெளியே வாம்மா என்று அழைத்ததும் விஜி சொல்வது நிஜமோ என்று வெளியில் வந்து மகனின் அறைக்குப்
போனாள். மகன் நிஜமாய் புகைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து பதறினாள். " ரவீ! என்னடா
இது புது பழக்கம். அவனவன் இருக்கிற கெட்டப்பழக்கத்தை பெண்டாட்டி வந்ததும் விட்டுடறான்.
நீ புதுசா இப்படிச்செய்யிறே " என்று அடிக் குரலில் மருமகளுக்குக் கேட்டுவிடக்கூடாது
என்ற ஜாக்கிரதை உணர்வுடன் மகனிடம் கேட்டாள்.
"முதலில் அந்தச் சனியனை தூக்கி எறி
" என்று கண்டித்துவிட்டு சமையலரைக்குப்
போனாள்.
மாமியார் பேசியது மாலியின் காதிலும் விழுந்தது. ' அஃபீஸில் என்ன டென்ஷனோ! புகைக்கலாம்னு
வாங்கியிருக்கிறார். ஆனால் அவருக்கே தயக்கமாய் இருந்திருக்கும். அதுதான் ஃபுல் பாக்
அப்பிடியே வைச்சிட்டிருந்தார். ஒன்னு ரெண்டு
புகைச்சா என்ன! டென்ஷன் மாறுமே. மாமியார்
ஏன் அவரை அநாவசியமாய் கண்டிக்கிறார். நானும் ஏதாவது கேட்டால் அவருக்கு கோவம் அதிகமாகிவிடும்.
வீண் ரகளையாகும் என்று மாலதி பேசாமலிருந்தாள்.
அவள் பேசாமலிருந்தது தப்பானது. மாலிக்குத் தன் மீது துளி கூட அன்பில்லை என்ற
முடிவுக்கு ரவியைத் தள்ளியது. அவன் கழிவிரக்கம் கொண்டான். ஆண் பிள்ளை அழமுடியவில்லை.
மாறாக ஆத்திரம் வளர்ந்தது.
அஃபீஸில், வீட்டு ஹாலில், ஏன் படுக்கை அறையில் கூட ஓயாமல் புகைத்தான். இருமினான்.
எந்த இடத்தில் ரெண்டு பேரும் இம்சையில்லாமல் சுவாசிக்கனும்னு சொன்னானோ அங்கே மாலிக்கு
உயிர் போனது. புகை வாசனை குடலைப்பிரட்டியது. குப்புறப்படுத்து மூச்சி திணறி திணறி தூக்கம்
இழந்தாள். நால் முழுக்க வேலையும், இரவின் தூக்கமின்மையும் தாய்மையின்ஆரம்ப உபாதைகளை
அதிகரித்தது. நாளெல்லாம் வாந்தியெடுத்தாள். அதிகம் களைப்படைந்தாள். ஆனாலும் ரவியை எதுவும்கேட்கவில்லை.
அவள் தாய்மை அடைந்திருப்பதைக்கூட அவனிடம் இன்னும் சொல்லவில்லை. அந்த கவலையுடன் கணவன்
ஆரோக்கியம் கெடுத்துக்கிறானே என்ற கவலையும் சேர்ந்துக்கொண்டது. ஆனாலும் கணவனின் உரிமைகளில்
தலையிடக்கூடாது என்ற கொள்கையில் பிடிவாதமாய் இருந்தாள். ரவியிடம்
பழையபடி இன்னும் நெருக்கத்துடன் நடந்துக்கொண்டாள்.
ஆனாலும் ரவியின் நடத்தையில் எந்த மற்றமும் ஏற்படவில்லை. மாலிக்கு மாமியாரிடமும்
விஜியிடமும்
ஒட்டுதல் அதிகமாகியது. எல்லாரிடமும் ரவி ஒரே மாதிரியாக நடந்துக்கொண்டான். அம்மாவிடம்
இருந்த மரியாதையைக்
கூட மறந்தவனாக விட்டேற்றியாக திரிந்தான். தங்கை விஜியை கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை.
அவர்கள் ரெண்டு பேரும் மாலதிக்குத் தெரியாமல் ரவியைத் திட்டினார்கள்
இது ரவியின் எரிச்சலை அதிகமாக்கியது. எல்லாரிடமும் சிடு சிடுத்தான். மேலே விழுந்து
பிடுங்காத குறையாக கத்தினான். வெறி தலைகேறியவன் மாதிரி நடந்துக்கொண்டான்.
மாலதி காரணம் புரியாது தனிமையில் அழுதாள். ராகவ்விடம் கேட்கலாம் என்றால் அவன்
வீட்டுக்கு வந்தே பல நாட்கள் ஆகிவிட்டது. கணவனுக்குத்
தெரியாமல் அவன் நண்பனிடம் விசாரிக்கவும் கொஞ்சம் தயக்கமாகவும் அதிகம்
அவமானமாகவும் இருந்தது. அந்த முயறச்சியையும்
கைவிட்டாள். "வேலைக்குப்போகும் ஆம்பிளைக்கு ஆயிரம் பிரச்சனை. அவர் கோபத்தை வேற
யாரிடம் காட்டமுடியும்! வீட்ல காமிக்கிறார் " என்று இன்னும் பொறுமையாய் ,பணிவாய்,
மென்மையாய்இருந்தாள்.
மாலதியின் அசாத்திய பொறுமை ரவியை மேலும் மேலும் சீண்டியது. தொட்டதுக்கெல்லாம்
மாலதியை குறை சொன்னான்.வார்தைகளால் குதறினான். இதைச் செய் அதைச் செய் என்று அவளை உட்கார
விடாமல் நச்சரித்தான். அவன் வீட்டில் இருக்கும்
நேரம் குறைவானது. இருக்கும் நேரத்தில் " மூதேவி, தூங்குமூஞ்சி, கொஞ்சமாவது சுரணை
இருக்கா பாரு! கள்ளுலி மங்கி " என்றுவாய்க்கு
வந்தபடியெல்லாம் திட்டினான். இப்படியே ஐந்து மாதங்கள் ஓடியது.
ராகவ் ரவியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்தான். சிகெரெட் புகையை
சும்மா சட்டையில்
ஊதும்போது குமட்டியவன் இப்பொழுது விடாமல்
புகைப்பது ஆச்சர்யமாய் இருந்தது. மாலையில் ஆஃபீஸ் விட்டதும் வீட்டுக்குப் பறப்பவன்
ஆறு ஏழு மணி ஆனாலும் அசையாமல் ஸீட்டில் உட்கார்ந்து வேலைப் பார்ப்பதும் , பல நாட்கள்
பாபுவுடன் சீட்டாடவென்று தான் போவதும் அல்லாமல் ராகவ்வையும் கட்டாயப்படுத்தி அழைப்பதும்
, மறுத்தால்
" குடுத்து வைத்தவன் நல்ல மனைவி வீட்டில்
இருந்தாள் யாருக்குத்தான் நண்பனுடன் சீட்டாட போகத் தோன்றும் போடா போ " என்று முனகுவதும்...எல்லாமே வித்தியாசமாக
இருந்தது. சரி என்னவாவது வீட்டில் புது மனைவியுடன் ஊடலாய் இருக்கும் . ஆனாலும் இந்த
விடாமல் புகைக்கும் பழக்கம் .... தினமும் லேட்டாக.....வீட்டுக்குப்போவது...என்று குழ்ம்பி
கொண்டிருந்தவனின் காதில் ரவிவிழுந்த செய்தியை ஜீரணிக்க முடியாமல் தவித்தான்.
துளசி ஒரு மாதிரியானப் பெண். அவள் வீட்டிற்கு ரவி அடிக்கடிப் போவது காதில் விழ
கலக்கமுற்றான். ரவியை
பிடித்துக் காரணம் கேட்டான். ரவி சிரித்து
மழுப்பினான். ராகவ் விடாமல் துளைத்தெடுத்தான். ரவி " ஒன்னும் இல்லைடா ராகவ், சரி நான் வீட்டுக்கு
கிளம்பிறேன் " என்று நழுவினான். ராகவ் " சரிடா நீ வண்டியை எடு நானும் உன் கூட அம்மாவைப்
பார்க்க வர்ரேன் விஜிக்கு நல்ல ஒரு அலையன்ஸ் வந்திருக்கு அதை அம்மாகிட்டே டிஸ்கஸ் செய்யனும்..."
என்று சொல்லியபடி பஜாஜில் ரவியுடன் தொற்றிக்கொண்டு அவன் வீட்டிற்கு வந்தான். மாலதி
மட்டும்தான் வீட்டிலிருந்தாள். அம்மாவும் விஜியும் கோவிலுக்குபோயிருந்தார்கள்.
மாலதி இன்முகத்துடன் ராகவ்வை வரவேற்றாள். இருவரும் முகம் கழுவிக்கொண்டு வந்தார்கள்.
மாலதி டவல்
எடுத்துக் கொடுத்தாள்.ரவி அதை அலட்சியமாய்
வாங்கினான். டவலில் சின்னதாய் ஒரு முடி ஒட்டிக் கொண்டிருந்தது
என்று அதை அவள் முகத்தில் விட்டெறிந்தான்.
அவளை சரமாரியாய் திட்டினான்.ரவி தன்னை ராகவ் முன்னால் திட்டுவது
கண்டு வேதனையுற்றாள். ஆனாலும் எதிர்த்துப்
பேசாது வேறு துண்டை எடுத்து வந்து நீட்டினாள். அதை எடுத்துவர
இவ்வளவு நேரமா என்றபடி அவள் முடியை பிடித்து
உலுக்கினான். " என்னங்க......" என்று
நிமிர்ந்தவளை எதிர்த்து பேசறியான்னு கன்னத்தில் அறைந்தான்.
ராகவ் விக்கித்துப்போனான். மாலதியை
தயக்கத்துடன் பார்த்தான். அந்நியன் முன் அவமானப்பட நேர்ந்த அதிர்ச்சி காட்டினாள்.உதடு
கடித்து அழுகை அடக்கினாள். மௌனமாய் உள்ளே போனாள்.
சுடச்சுட பஜ்ஜியும், நெய்யொழுக கேசரியும் கொண்டு வந்து வைத்தாள். அவளை முறத்தபடி
" ஏய் யாருக்கு வேனும் உன் வள வள கேசரியும், சொத சொத பஜ்ஜியும். தூக்கிட்டுப்போடி.
நல்லா காரமா முறுகலா சிப்ஸ் போட்டு கொண்டா
" என்று தட்டை எடுத்து வீசப்போனான்.
" டேய் ரவி நீ என்னடா இப்படி நடந்துக்கிறே. நான் கொஞ்சம் கூட இதை உன் கிட்ட
எதிர்பார்க்கலே! சிஸ்டர் எனக்கு
கேசரி பிடிக்கும். நீங்க வையுங்க "
என்று கொஞ்சம் ரவியை அதட்டுவது மாதிரி தொனியுலும். மாலதியிடம் இறைஞ்சுதலுமான
குரலிலும் பேசினான்.
மாலதி அவனைப்பார்த்து சிரிக்க முயற்சித்தாள். அவள் கண்களில் துளிர்த்த கண்ணீர்
கன்னங்களில் உருண்டது. அதை மறைக்கஅவசரமாய் உள்ளே போகத் திரும்பினாள்.பொங்கி வந்த அழுகையை
அடக்கப் பெரிதும் பிரயாசைப் பட்டாள்.
ராகவ் அமைதியாய் ரவியைப் பார்த்தான்.
ரவியின் முகம் கன்றி சிவந்திருந்தது. கோபத்தில் உதடு துடிக்க "பார்த்தியாடாஅவளை! அவளுக்குத் துளியளவுகூட
என் மீது அக்கறையில்லை. என் மேல கரிசனமில்லை. எவ்வளவு நெஞ்சழுத்தம் தெரியுமா? எப்பிடியிருந்த
நான்....நான்... இவளால ...ச்சே சொல்லவும் நினைக்கவும், .. வலிக்குதுடா....ராகவ் ....
..... நான்.... இல்லாத ... புது பழக்கமா
சிகெரெட் பிடிப்பதை தடுக்க.... முயற்சிக்க... ஒரு கேள்வி கேட்டது இல்லை, ஏன் வீட்டுக்கு
லேட்டா வர்றீங்கன்னு வாய் திறந்தது இல்லை, எங்கே போறீங்க? யார் கூட சுத்திட்டு வர்றீங்க!? வீணா உடம்ப கெடுத்துக்கிரீங்களேன்னு கவலைப்பட்டது
இல்லை அவ்வளவு ஏன் இன்னுமே அவள் எங்கிட்டே
அவள்
தாயாகப்போவதைச் சொல்லவில்லை.... என்று கோபமும் ஆவேசமாகவும் ஆரம்பித்தவன் கண்களில் நீர் துளிர்க்க உடல் நடுங்க நிற்க முடியாமல் தொப்பென்று சோபாவில்
விழுந்தான். ராகவ் அவன் தோளைத் தொட்டதும் நண்பனின்
தோளில் சாய்ந்து குமுறி குமுறி அழுதான்
கணவனின் வார்தைகள் ஒவ்வொன்றும் மாலதியின்
காதில் ஈட்டியாக விழுந்தது. அவள் அதிர்ச்சியில் உறைந்து
போனாள். கணவனின் மனம் நோகக்கூடாது என்று
அவள் செய்த தியாகம் என்ன?. தன் அண்ணன்கள் பட்ட வேதனைக் கணவன்படக்கூடாது என்று அவள் காத்த பொறுமைக்குப் பெயர் அக்கறையின்மை! அவள் நெஞ்சு வெடித்துவிடும் போல அடித்துக்கொண்டது.
கணவனுக்கு அஃபீஸில் ஏதோ பிரச்சனை அதை அவனாக தன்னிடம் சொல்லும்வரை அவனை தான்
நச்சரித்து உயிரை வாங்கக்கூடாது என்று
தன் வலி ,சோகம் ,அழுகை இதை எல்லாம் மறைத்துக்கொண்டு அமைதி காத்ததற்குப்பெயர் நெஞ்சழுத்தம்!
ஐய்யோ கணவன் சிகெரெட் பிடித்து உடம்பை கெடுத்துக்கொள்வதோடு இரவு கண் விழிக்கிறானே என்றுஅவன்
இல்லாத பகல் வேளைகளில் அழுது அழுது தான் பட்ட வேதனைக்குப்பெயர்...கரிசனமின்மை.....
இந்த ஐந்து மாதத்தில்தான் தாயாகப் போகும் செய்தியை இன்று நல்ல மூடில் வருவார் சொல்லலாம்,
நாளை சொல்லலாம் என்று நாட்கள் கடந்ததை எண்ணி தான் அடைந்த துக்கம்......... நாணயத்தின் இன்னொரு பக்கம் என்பார்களே! வாழ்கையின் இன்னொரு முகம் தன் கோர பற்களைக் காட்டி
அவளை ..........!!!!!!!!....!??????????? அவள்
திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு வந்த பொழுது செய்துக் கொண்ட மன சங்கல்ப்பத்தையும்
இப்பொழுது அதற்கு நேர் மாறாக நடந்திருப்பதையும் எண்ணி..........ஓவென்று வெடித்து அழுகிறாள்.
ராகவ் செய்வதறியாது திகைத்து நிற்கிறான்!
பின் குறிப்பு: (ராகவ் திகைத்து நின்றாலும்
பின் இருவரையும் சமதானப்படுத்தியதும் ,அவர்களும்
தங்கள்
புரிதலில்லாத நிலையுணர்ந்து தங்களை திருத்திக்கொண்டதும்,
மாலி அழகான குழந்தைக்குத் தாயானதும்.......இப்பொழுது
மாலி எடுத்ததெற்கெல்லாம் ரவியை மிரட்டுவதும்........
நச்சரிப்பதும்.......அது இன்னொரு கதை)
No comments:
Post a Comment