தீரா பசி !
" தீரா பசியுடன் தின்ன மீண்டும் மீண்டும் அவர்களையே தேடும் பசி கொண்டலைகிறேன். .”
அம்மாவுக்குப்பிடிக்கும் என்று அப்பா வாங்கி அடுக்கிய அத்தனை பொருட்களையும் உற்றுப்பார்ப்பதும் ,தடவிப்பார்ப்பதுமாய் இன்றய பொழுது கழிகிறது . இவர்கள் இருவரும் விட்டுச்சென்ற அடையாளங்கள் வீடு முழுவதும் வடுக்கலாய் காய்த்துக்கிடக்கிறது. தனியனாய் இவைகளைத்தடவிப்பார்த்து சோம்பி இருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது.
மூட்டை ஒன்றை அவிழ்த்து அதன் நுனியைப்பற்றி சரேல்னு இழுத்ததும் சரிந்த பொருடகள் உருண்டு ஓடி அடங்கும் சத்தம் என் மனதில் அமைதியை கொடுத்தது.. அல்லது அப்படி நான் பாவித்துக்கொள்கிறேன். எனக்கு அம்மாவின் மீது கோபம் கொப்பளிக்கிறது. உருண்ட பொருட்களில் என் காலைக்கீறிய உடைந்த பொம்மை ஒரு கரடி உருவம். அதன் கூரிய நகம் உயிர்த்திருப்பதுபோல சிலீர்னு ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதுவே அம்மா மீதான கோபத்திற்குக்காரணம். “ ஆண் பிள்ளை விளையாட டெட்டி பியர் வாங்கித்தருவாங்களா "ன்னு அப்பா கேட்ட பொழுது அவள் சிரித்தபடி இந்த கூர் நக கரடி பொம்மையை எதன் குறியீடாக வாங்கினாள் என்பது இப்பொழுது புரிகிறது. அந்தப்புரிதலே என் கோபம் அதிகமாக உக்கிரம் கொள்ள காரணமாகிறது. அவளது எந்த முடிவையும் மறுக்காத என் அப்பா ஒரு சோப்பிளாங்கி என்ற ஆத்திரமும் சேர்ந்துக்கொண்டது. என்றைக்காவது இவைகளை நான் எடுத்துப்பார்க்கும்பொழுது இது போல் உணர்வேன் என்று அம்மா அறிந்திருப்பாளோ என்ற ஆச்சர்யம் கோபத்தைக்குறைக்கிறது. அம்மா ஒரு விசித்திர மனுஷி. அப்பா அந்த விசித்திரத்தை இரசித்து இரசித்து மூர்ச்சித்துப்போயிருப்பார் என்ற ஒரு சிந்தனை ஓடியது. வீடு நிறைய இருக்கும் அத்தனையும் அவளின் அடையாளமாய் அவள் அப்பா மீது செலுத்தின ஆளுமையின் அடையாளமாய் தெரிகிறது. புத்தகங்கள் வரிசை வரிசையாய் அலங்காரம் செய்யும் ரேக்குகளைத்தடவும் பொழுது அம்மா அவைகளின் ஒவ்வொரு வரியையும் இரசனையுடன் வாய்விட்டு படிப்பது கேட்கிறது. அம்மா இவைகளில் எதைத்தேடினாய்? எதற்கு இத்தனை புத்தகங்களை சேர்த்து வைத்தாய். நான் இவைகளில் உன்னைத்தேடுவேன் என்றா? நிஜத்தில் நான் அதைத்தான் செய்துக்கொண்டிருக்கிறேன். அந்தப்புரிதலே என்னுள் எரிச்சலையும், கையாலாகாத கழிவிரக்கத்தையும் உண்டாக்குவதை தவிர்க்க முடியவில்லை. சமையலறையில் அவள் வைத்திருக்கும் பொருட்கள். சமையலை அதன் நுணுக்கமான அறிவியலை அவள் இரசித்து,அர்ச்சித்து வாழ்ந்ததைச்சொல்லும். தினமும் நள பாக படையல்தான் வீட்டில் மணக்கும். யாரும் பசித்திருக்க பொருக்க மாட்டாள் அம்மா. அப்பாவுக்கும் தெருவில் காய் விற்பவுனுக்குக்கூட அம்மா காப்பி விலவுவதை ஆமோதிக்கும் அருமையான குணம். இன்று அவர்கள் விட்டுப்போனதை துடைப்பதும் அவர்களின் சுவடு மாறாமல் அவைகளை காப்பதும் மட்டுமே வாழ்க்கை என்று என்னை சுருக்கிக்கொண்ட எனக்கு தீரா பசியாய் தின்ன மீண்டும் மீண்டும் அவர்களையே தேடும் பசி கொண்டலைகிறேன். . இது நோய் என்று தெரிந்தும் இந்த நோய்க்கு மருந்து வேண்டாதவனாய் இருக்கிறேன்.
No comments:
Post a Comment