Pages

12.13.2014

   அம்மாவின் அழுக்கு முகம் !


         ஒரு மழை நாள் இரவின் முகம் தெரியாத இருட்டில்
நிழல் உருவமாய் உன்னைப்பார்க்க  வந்தது யார் என்று கேட்க நினைத்த கேள்வி அழியாத நினைவாய் அம்மா பிணமாக கிடக்கும் இந்த நிமிடத்திலும் என்னுள் பிரளயமாய் ஊழித்தாண்டவமிடுவது  நிஜம்..
     அப்பாவுக்குத்தெரியாத  இந்தக்கள்ளத்தொடர்பின்  நாயகன் யார் என்பது அம்மா மட்டுமே அறிந்த இரகசியமாய் புதைந்து போனாலும் அந்த இரகசியம் என்ன என்பது அறியாமல் என் மனதில் எழும் கேள்வி ஒரு தீராத அவமானமாய் என்னை வாட்டுவதும் நிஜம்..
     அம்மாவே ஆனாலும் அவளின் அந்தரங்கத்தில் நுழைவது அசிங்கம் என்ற தெளிவு இருந்தாலும் இந்த அவமானம் எனக்குள் எப்படி முளைத்தது என்று ஆராய முற்படும் பொழுதெல்லாம்  ஏதோ ஒன்று அதை தடுத்த வண்ணம் தொடர்ந்து வந்தபடி இருந்தது.
    எதற்கும் அலட்டிக்கொள்ளாத  என்னை இது சின்னஞ்சிறியவனாய் அம்மா மடி தூங்கும் பிள்ளை பிராயம் தொட்டு வாட்டி வருவது எதனால் என்று இப்பொழுது என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.  .

       அம்மாக்களுக்கு என்று ஒரு முகம் இருக்குமோ அவர்கள் கணவன்மார்களை அனுசரிக்கும் இயந்திரங்களாய்  வலைய வருவதில் திருப்தி அடைவதில்லையோ என்ற குழப்பம் வாட்டி எடுக்கும் மனதுடன் அவள் பிரேதம் பார்த்து கிடக்கிறேன்.
   
     அழுகை என்ற ஒன்று இருப்பதை மறந்தவனாய் இற்றுப்போன இதயத்தின் தாபமெல்லாம் இந்த இரகசியம் அறியப்படமலே போன மாயத்தை எண்ணி எழுந்த ஒரு ஊமைக்கோபம் என்னைத்தாண்டி வெளியில் குதித்துவிடுமோ என்ற அச்சம் கூடவே இருந்து துன்புறுத்தியது.


      இது எதையும் அறியாதவராய் அப்பா அவர் பாட்டுக்கு தன் இயல்புடன் அம்மாவை அடக்கம் செய்ய தேவையானவைகளை செய்துக்கொண்டிருந்தா ர்.
       எல்லா ஏற்பாடுகளும் நடந்துக்கொண்டிருக்கும்  பொழுது அப்பாவின் கவனம் வாசலுக்கு அலைவதை யதேச்சையாய் பார்க்க நேர்ந்தது. .
     
    அவர் முகத்தில் லேசானதொரு பதட்டமும் கிலேசமும் இம்மியளவு தெரிவதை என் கண்கள் காணத்தவறவில்லை..
     ஆனால் அவரின் அருகில் சென்று அது என்னவென்று கேட்கும் மனமும் இல்லாமல் நான் அப்படியே அம்மா அருகில் இருந்தேன். உண்மையைச்சொல்வதென்றால்  எனக்கு அம்மாவின் மீதிருந்த அத்தனை கோபமும் அப்பாவினிடம்  திரும்பி- இருந்தது.
 
       இவர் எல்லாம் என்ன ஆம்பிளை என்ற அலட்சியம். ….  கட்டின பொண்டாட்டியை ஒழுங்க மேய்க்க முடியாமல்....... தூன்னு வந்தது.
       அதே சமயம் அந்த சம்பவத்தின் நாளில் அப்பா வீட்டில் இல்லை என்பது என் நினைவில் நன்றாக உள்ளது.  அம்மா ஏன் இப்படி செய்தாய் என்று நான் கேட்க நினைத்து கேட்காத கேள்வி என்னை இப்பொழுது படுத்துவதுபோல எப்பொழுதும் படுத்தியதில்லை. . அப்படி அது என்னை குடைந்து கொத்தி தின்னும் நாளில் அம்மா தப்பித்துபோனாள் . மரணம் அவளுக்கு கை கொடுத்தது எண்ணி "சண்டாளி என்னைத்தவிக்க விட்டுப்போனாயே …........  “ என்று வாய் விட்டு கதறிய பொழுது நான் அவள் இறந்து போனதற்கு அழுவதாய் அனைவரும் நினைத்து ஆறுதல் படுத்த வந்த பொழுது அப்பாவுக்கு அந்த சண்டாளி......... அதிகம் உருத்தியிருக்கும்  போல அவர் என் அருகில் வந்து என்னைத்தோள் தட்டி எழுப்பினார் . என்னை கைத்தாங்களாய்  அவர் வெளியில் நடத்திப்போனார் .
       நான் அவருடன் போக மறுக்க முற்பட்டு "போய்யா நீயும் ஒரு ஆம்பளைன்னு................  ஆரம்பித்த வசனங்கள் முடியும் முன் அவனை விடுங்கள் நடேசன்னு ஒரு கம்பீரமான ஆண் குரல் என்ன நிமிர்ந்து பார்க்க வைத்தது.
       அச்சு அசல் என் உருவம் கிழ வேடமிட்டு நின்றால் எப்படி இருக்குமோ.................

       ஐய்யோ நான் நகல் மனிதன். என் உருவத்தின் சொந்தக்காரன்  இதோ கிழ வேடமிட்டு என் முன்னால் நிற்கிறான் .

        பொறி தட்டியது அந்த மழை நாளில் வந்தவன் இவன் தான்.
அப்படியானால்  நான் என்று குழம்பி நின்ற என்னை என் அப்பா நடேசன் " அப்பா  ஜெகன்னாதா  இந்தா உன் பிள்ளை இதோ இருக்கிறான் . கூட்டிட்டுப்போய்  மனசார உன் பொண்டாட்டிக்கு  கொள்ளி வையுங்க . அவங்க ஆத்மா சாந்தி அடையனும்னா மொதல்ல உன் புள்ளைக்கு உன் கதைய சொல்லு.” என்றபடி அங்கிருந்து  நகர்ந்துச்சென்றார் . நான் அப்பா என்று அவர் பின்னால் போக எத்தனித்தபொழுது  அவர் தன் பார்வையால் என்னை தடுத்து நிறுத்தினார் .

        அவர் பார்வையின் உக்கிரம் தாங்காமல் குற்றம் என்னை  பிடுங்கி எடுக்க தலை குனிந்து நிற்கிறேன்.. நடேசன் தலை நிமிர்ந்து தன்னை அடைக்களமாய் வந்தவளை அடக்கம் செய்ய தேவையானவைகளை கவனிக்கசெல்கிறார் .

          இப்பொழுது நினைவில் வருகிறது அப்பா எப்பொழுதும் அம்மாவுடன் தூங்கியது இல்லை என்பது. 
Show less
4

No comments: