சிலிர்க்கும் பம்பரச்சுழி.
வண்டி வரும் ஒரே கட கட சத்தம். சந்தைக்கட்டில்
முடிக்கி வீடு வந்து சேரும்வரை ஒரே ஓட்டம். பித்தளை அண்டாவில் ஆவி பறக்கும்
கொதித்து வெந்த நீர். பதமாய் விலாவி எருதின் கால்களை உருவி முதுகு பிருஷ்டம்
தேய்த்து நிமிர்கையில் வியர்வையில் தெப்பலாக குளித்தது போலிருக்கும் அவரைப் பார்க்கும்போது.
மாட்டின் முதுகில் கை அழுந்த சிலிர்க்கும் மாட்டின் முதுகு குறி சிறு பம்பரச் சுழி மாதிரி
இருக்கும். அதை கண் அகல பார்த்திருப்பேன். கூடவே அவரையும். குளித்த மாட்டுக்கு
தவுடு கலக்கி குடிக்க கொடுத்து அசைபோட பில்லையும் உருவி போட்ட பின்னாடியே அவர் நிமிர்வார்.
அப்புறம் அத்தை அவருக்கு எல்லா சீராட்டலும்
மாட்டைவிட அதிகமாய் செய்வார்.
அக்கறையும் பிரியமும் அன்பும் வழியும் அதில். அவள் முகம் நிமிர்த்துவாள் இல்லை.
அவர் கண்கள் இம்மி பிசகாது அவள் முகத்தையே வடம் பிடிக்கும். குளித்து சாப்பிட்டு
படுக்கையில் சாயும் பொழுது அவரை விட அவளே கலைத்திருப்பாள் அதிகம். இது வாரத்தில்
ஏழு நாட்களும் தொடரும். ஊர் ஊரா வண்டி ஓடும் வாழ்க்கை . ஜவுளி சுமந்து வண்டி
ஓடும். அவரை சுமந்து அவள் ஓடுகிறாள். முரட்டு உழைப்பு அவரதுன்னு ஊரே அவரை ஊர்கோலம் சுமக்கும். எனக்கென்னமோ
அவளைச்சுற்றி சுற்றி மொய்த்து மீளும் நினைவுகள். அவளுக்கு பதினெட்டு அவருக்கு
இருபத்தொன்று வாழ்க்கை வண்டியில் பூட்டியபொழுது. அவருக்கு அறுபதுகளில் பில்லும்
தவிடும் சாணியும் கோமியமும் தெவிட்டியதோ மாடுதான் சலித்ததோ சந்தைக்கு மாட்டுவண்டி
கட்டுவதை விட்டார். அடுத்த வந்த வருடங்களில் சந்தை பிழைப்பும் விட்டார்.
அப்பொழுதும் அவள் மீது மாட்டின் வாசனையை முகர முடிந்தது. அவளது ஊழியம் அவருக்கு
தொடர்ந்தது. மட்டுக்கானால் என்ன கட்டிய மனஷனுக்கானா என்ன பிரியத்தின் வழித்தடம்
அவளுள் பேரன்பு சுமந்தது. எழுபதில் அவருக்கு குடல் இறக்கம் கண்டது. அது சுருண்டு
சுருண்டு வலிகள் பெருகியது அவளின் வலிகளை பெருக்கியது. மருந்து, மாத்திரைகள்,
ஆஸ்பத்திரி வராண்டாவில் காத்திருத்தலில் அவள் கால்கள் சலைத்தன. அறுவைக்கு
ஆகாதுன்னு மருத்துவர்கள் கைவிட அவள் கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டாள்.
விதைப்பியில் குடல் இறங்கி அவர் மாட்டின் மடி சுமந்தார். காலை மாட்டின்
மடி பெரிதாக பெரிதாக அவளுக்கு அவரே மாடாக மாறினார். அவரை வெந்நீர் விலாவி குளிப்பாட்டி விடுவது நித்திய சடங்கானது. மாடும்
சாணியும் கோமியமும் போய் பீஜ்ஜியம் பெருத்த அவருக்கு பீயும் மூத்திரமும் அள்ளி
வேட்டி சட்டை கசக்கிப்போடவும் ஆன நாட்களின்
களைப்பு சுவடை அழித்து தொடர்ந்தது
அவள் பிரேமையின் சிசுருஷை. அவருக்கு குறை
ஒன்றும் இல்லை. அதைத்தான் அவள் முகுகில் சுமக்கிறாள். ஆனாலும் சலித்தாள் இல்லை.
செட்டுப்பல்லும் சிங்காரித்த தலையும் வெள்ளை வேட்டி சட்டையும் கறியும் மீனும் இருபத்தொன்றின் மைனர்
வாழ்க்கைதான் மனுஷன் சாகும்வரை. என்பதொன்பதில் கீழே விழுந்தவர்தான். எழவேயில்லை.
அவளின் மடி கனக்க மாண்டு போனார். கல்யாண சாவென்று தேர் சுமக்க ஊர்கோலம் போனார்.
அவளை கட்டிக்கொண்டு அழுதவர்களை பார்க்க எனக்கு பற்றிக்கொண்டு வந்தது. அறுபத்தெட்டு
வருடங்கள் அவள் சாணியும் கோமியமும் பீயும் மூத்திரமும் அபிஷேகம் கண்டது போதும்
அவளை கொஞ்சம் தனியாக விடுங்கள். உழைத்து ஓய்ந்த அவள் முதுகுச்சுழி சிலிர்ப்பதை
அனுபவிக்க விடுங்கள் என்று கத்தினேன். என் குரல் எனக்கே கேட்கவில்லை. என் மனதில்
அவளின் சிலிர்த்த பம்பரச்சுழி சுழன்றாடுகிறது.
04.06.17.
No comments:
Post a Comment